Thursday, December 4, 2008

கண்ணாடிச் சுவர்கள்


தீயின் தீண்டலில்
கனிந்துபோன காயங்களின்
வலி தீர
உள்ளங்கையால் நீ
உரசிவிட்டுப் போனதும்
வரலாற்றில் புரியாமல்போன
சிபபாய் கலகத்தின்
பரவல்களாய்
பரந்துசென்றது
என் தேகம் முழுவதும்
உன் உணர்ச்சிகள்….
உன் விரல்களின்
வருடலில் வழிந்த
ஈரத்தின் வேர்கள்
இறுகிப்பிடித்து
இம்சை செய்தது
காயத்தை மட்டுமல்ல….
வலியின் விளிம்பில்
நான்
கலங்கிய கண்களோடு
நீ.
பழகிப்போன ஆறுதல்கள்
ஒரு புறம்
சுவாசத்தை
சல்லடை போடும்
மருந்துகள் மறுபுறம்.
மரணத்தின் மறைபொருளாய்
காரிருள் கருவிழியில்
கசிந்து கொண்டிருக்க….
ஒதுங்கி நிற்கும்
ஒப்பனை முகத்தில்
வெளிச்சம் குறைந்து
கொண்டிருக்க….
எம்பித் துடிக்கும்
என்
நெஞ்சில் அழியாத
ரேகையை பதியவைக்க
விரதமிருக்கும்
உன்
விரல்களுக்கும்
கடைசியாய்
உள்காயத்தின் கனவுகளை
உந்தன் கண்களில்
கலப்படம் செய்யக்
காத்திருக்கும்
எனக்கும்
இடையில்
ஏன் இந்த
”கண்ணாடிச் சுவர்கள்? ”
 

--சுபசெந்தில்.